சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

12.040   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

-
அம்பொன் நீடிய அம்ப
லத்தினில் ஆடு வார்அடி சூடுவார்
தம்பி ரானடி மைத்தி றத்துயர்
சால்பின் மேன்மைத ரித்துளார்
நம்பு வாய்மையில் நீடு சூத்திர
நற்கு லஞ்செய்த வத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கி னார்இளை
யான்கு டிப்பதி மாறனார்.

[ 1]


அழகிய பொன் வேயப்பெற்ற திருஅம்பலத்தின் கண் திருக்கூத்து இயற்றும் பெருமானின் திருவடிகளை எந்நாளும் தமது நெஞ்சத் திருத்தி வழிபாடாற்றி வருபவர். அப்பெருமானுக் குரிய அடிமைத் தன்மையில் சிறந்து விளங்கும் தகுதிப்பாட்டால் மேன்மை அடைந்தவர். விரும்புதற்குரிய மெய்ம்மையினால் உயர்ந்த வேளாண் குலம் செய்த தவத்தால், அக்குலத்தில் தோன்றி, இந்நிலவுல கில் தம் புகழை விளங்கச் செய்த பெருமையினார், அவர் இளையான் குடிப்பதியில் தோன்றியவர். மாறன் என்னும் பெயருடையார் என்பதாம்.

குறிப்புரை: நம்புவாய்மை - எல்லோரானும் விரும்புதற்குரிய வாய்மை 'யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத் தொன்றும் வாய்மையின் நல்லபிற' (குறள், 300), 'பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று' (குறள், 296), என்பவாதலின் வாய்மையே சிறந்ததும், எல்லோராலும் விரும்பத்தக்கதும் ஆகும். ஆதலின் 'நம்பு வாய்மை' என்றார். வேளாண்குலத்தைச் சூத்திரர் என்னும் பெயரால் குறிக்கின்றார் ஆசிரியர். 'சூத்ரா சுத்த குலோ தீபவா' என்பது சிவாகமம்,. இதனால் இம்மரபினர் தூய்மையும், உயர்வும் உடையவர் என்பது பெறுதும்.
இதுபற்றியே 'சூத்திர நற்குலம்' என்றார் ஆசிரியர். இவ்வாறு ஈண்டுக் கூறிய தோடன்றி, வாயிலார் புராணத்தும் அவ்வடியவர் தோன்றிய இவ்வேளாண்குலத்தைத் 'தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல நன்மை சான்ற நலம்' (தி. 12 பு. 51 பா. 6) எனக் குறிப்பர். இதுவன்றி இச்சொற்குப் பிறவாறு உரைப்பன வெல்லாம் ஆசிரியருக் குக் கருத்தன்று. இனிச் சூத்திரர் என்பதற்கு ஆட்டுவிப்பவர் எனப் பொருள் கொண்டு, இவ்வுலகை உணவானும், அதன் வழியில் நற்பண்பாட்டானுமெலாம் இயக்குபவர் எனக் கூறலும் பொருந்துவ தாகும். 'உழுவார் உலகத்தார்க்கு ஆணி' (குறள், 1032), 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' (குறள், 1031), 'பலகுடை நீழலும் தங்குடைக் கீழ்க்காண்பர்' (குறள், 1034),' என்றெல்லாம் திருவள்ளுவனார் குறித்தருள்வதும் ஈண்டு நினைவு கூரத்தக்கதாம்.
இளையான்குடி - இது சோழநாட்டிலுள்ள திருநள்ளாற்றுக்கு மேற்கே அமைந்துள்ளது என்றும், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடிக்கு வடகிழக்கில் உள்ளதொரு கிராமமே இது என்றும் இரு திறனாகக் கூறுவர்.
திருநள்ளாற்றுக்கு அண்மையில் உள்ள இளையான்குடியில் சிவபெருமானுக்குரிய திருக்கோயில் ஒன்று உள்ளது. இதற்குத் தெற் கில் 'முளை வாரிக்குட்டை', 'முளை வாரி நாற்றங்கால்' என்ற பகுதிகள் உள்ளன. இதனால் இதுவே மாறனார் வாழ்ந்த பதி என்பர்.
இனி இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இளையான்குடியில், 'முளைவாரி அமுதளித்த நாற்றங்கால்' என்றபெயரால் ஒரு சர்வ மானிய நிலம் வழங்கிவரப் பெறுகின்றது என்றும், இவ்வூரில் உள்ள பழைய சிவாலயத்தில் முளைவாரி அமுதளித்த விழாநடந்து வந்த தென்றும், மாறன் என்ற பெயர் பாண்டியர் மரபுக்குரியதாதலின் பாண்டி நாட்டிலுள்ள இப்பதியே அவர்தம் ஊராகும் என்றும், இதற்கு ஏற்பப் பாண்டி நாட்டவராயிருத்தல் குறிக்கத் தக்கதென்றும் கூறுவர்.
இனித் தொண்டை மண்டல சதகத்தார் இவ்வூர் தொண்டை நாட்டில் இருப்பதாகும் என்று கூறுவர். இவ்விடங்களுக் கெல்லாம் நேரில் சென்று மேலும் எண்ணித் துணிவது தக்கதாம். திருவருள் கூட்டுவிப்பதாகுக.

ஏரின் மல்குவ ளத்தி னால்வரும்
எல்லை இல்லதொர் செல்வமும்
நீரின் மல்கிய வேணி யார்அடி
யார்தி றத்துநி றைந்ததோர்
சீரின் மல்கிய அன்பின் மேன்மை
திருந்த மன்னிய சிந்தையும்
பாரின் மல்கவி ரும்பி மற்றவை
பெற்ற நீடுப யன்கொள்வார்.

[ 2]


உழவுத் தொழிலால் நிறைந்து பெருகும் உணவு வளங்களினால் பெருக வரும் அளவில்லாத செல்வமும், கங்கை தங்கிய திருச்சடையையுடைய சிவபெருமானின் அடியவரிடத்து நிறைந்துள்ளதொரு சிறப்பின் மிக்க அன்பினது மேன்மை முழுமை யாக நிலைபெற்றிருக்கும் திருவுள்ளமும், உலகில் வளர்ந்து பயன்படு தற்கேற்ப, அவற்றைத் தாம் பெற்றதனாலாகிய நீடிய பயனை அடை வாராய்.

குறிப்புரை: திருந்த மன்னிய - முழுமையாக நிலைபெற்ற.
செல்வமும், அன்புள்ளமும் ஒருங்குபெற்ற இளையான்குடி மாறனார் அவற்றைப் பெற்றதன் பயனையும் முழுமையாக அடை வாராய் வாழ்ந்தார் என்பது கருத்து.

ஆர மென்புபு னைந்த ஐயர்தம்
அன்பர் என்பதொர் தன்மையால்
நேர வந்தவர் யாவ ராயினும்
நித்த மாகிய பத்திமுன்
கூர வந்தெதிர் கொண்டு கைகள்கு
வித்து நின்றுசெ விப்புலத்
தீர மென்மது ரப்ப தம்பரி
வெய்த முன்னுரை செய்தபின்.

[ 3]


எலும்பினை மாலையாக அணிந்த சிவபெருமா னுடைய அடியவர் என்னும் முறைமையால், தம்மிடத்துப் பொருந்த வந்தவர்கள் யாவராயினும், தாம் நாளும் இயல்பாகச் செய்து வரும் பத்திமையால் முற்பட வந்து அவர்களை எதிர்கொண்டு, கை குவித்து வணங்கி, நின்று, அவர்தம் செவிகளில் குளிர்ந்த, மென்மை யான, இனிய மொழிகளை அவர் விரும்புமாறு முதற்கண் சொல்லிய பின்பு.

குறிப்புரை: என்பு ஆரம் என மாறுக. நேர - தம்மிடத்துப் பொருந்த. பதம் - சொல். அடியவரை வரவேற்கும் சொற்கள் மூவகைப் பண்பினவாய் அமைய வேண்டும். முதலாவதாகக் குளிர்ந்த மொழி களாக இருத்தல் வேண்டும். ஈண்டுக் குளிர்ச்சி அன்பின் மேலதாம். 'ஈரம் அளைஇ' (குறள், 91) என வருவதும் காண்க. இரண்டாவது மென்மையாக இருத்தல் வேண்டும். மூன்றாவது இனிமையை யுடையவாக இருத்தல் வேண்டும். இதுவே ''ஈரமென் மதுரப்பதம்'' எனப்படும்.
பரிவு எய்த - அவர்கள் விரும்புமாறு பொருந்த. எனவே முற்கூறிய மூவகை அமைப்பில் வரவேற்கும் மொழிகள் அமையினும், அவையும் அவர் விரும்புமாறு அமைதல் இன்றியமையாததாம்.
யாவராயினும் - உம்மை முற்றும்மை. அன்பர் என்பதோர் தன்மை - திருநீறும். கண்டிகையும் அணிந்து திருவைந்தெழுத்தை இடையறாது ஓதிவரும் தன்மையாம். 'எவரேனும் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி,' (தி. 6 ப. 61 பா. 3) 'ஆவுரித் துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில் அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவு ளாரே!' (தி. 6 ப. 95 பா. 10) என்றல் தொடக்கத்தனவாய திருவாக்குகளும் காண்க.

கொண்டு வந்தும னைப்பு குந்துகு
குலாவு பாதம்வி ளக்கியே
மண்டு காதலின் ஆத னத்திடை
வைத்த ருச்சனை செய்தபின்
உண்டி நாலுவி தத்தி லாறுசு
வைத்தி றத்தினில் ஒப்பிலா
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில்
அமுது செய்யஅ ளித்துளார்.

[ 4]


இவ்வகையில் அடியவர்களை வரவேற்று அழைத் துக் கொண்டு வந்து, தாமும் அவரொடு மனையில் புகுந்து, யாவர்க் கும் அருள் விளக்கம் தருதற்குரிய அவர்தம் திருவடிகளைக் குளிர்ந்த தூய நீரால் கழுவி, நிறைந்த பெருவிருப்போடு, அவர்களைப் புனித இருக்கையில் அமர்வித்துத் திருவடி வழிபாட்டினைச் செய்த பின்பு, நால் வகையான உணவுகளை, அறுசுவையோடு, ஒப்பில்லாத தேவர் களுக்குத் தலைவனாய, சிவபெருமானுடைய அடியவர்களை மிக விருப்போடு உணவு உண்ணுமாறு நாள்தொறும் கொடுத்து வந்தவர்.

குறிப்புரை: குலாவு பாதம் - விளக்கம் தருகின்ற திருவடி; ஈண்டு விளக்கம் அருள் விளக்கமாம். மண்டு காதல் - மீதூர்ந்த விருப்பம். ஆதனம் - இருக்கை. உண்டி நான்கு வகையாவன:- உண்டல், தின்றல், பருகுதல், நக்குதல் என்பன. ஆறுசுவை - தித்திப்பு, புளிப்பு, கைப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என்பன. ஒப்பிலாநாயகர் எனக் கூட்டுக. இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

ஆளு நாயகர் அன்பர் ஆனவர்
அளவி லார்உளம் மகிழவே
நாளு நாளும்நி றைந்து வந்துநு
கர்ந்த தன்மையின் நன்மையால்
நீளு மாநிதி யின்ப ரப்புநெ 
ருங்கு செல்வநி லாவியெண்
தோளி னார்அள கைக்கி ருத்திய
தோழ னாரென வாழுநாள்.

[ 5]


தம்மை அடிமையாகக் கொள்ளும் சிவபெருமானு டைய அடியவர்கள் எண்ணிறந்தவர்களின் திருவுள்ளம் மகிழ்வடைய, அவர்களுக்கு நாள்தொறும் உணவு அருத்திய பேற்றின் நன்மையால், நாளும் பெருகி வரும் பொன், மணி முதலிய நிதிகளின் தொகுதி நிறைந்து வரும் செல்வத்தால் விளங்கி, எண் தோள்களையுடைய சிவபெருமான் அளகாபுரிக்கண் வைத்த குபேரன் என்னும் தோழனை யொத்து வாழ்ந்திருக்கும் நாளில்.

குறிப்புரை: நல்ல அடியவர்களுக்கு நாளும் உணவளித்து வருதல் நீளும் செல்வத்திற்குக் காரணமாகும். 'அகனமர்ந்து செய்யாள் உறையும்,' (குறள், 84) 'வித்தும் இடல் வேண்டும் கொல்லோ' (குறள், 85) என வரும் திருக்குறட்பாக் களையும் காண்க. தோழனார் - குபேரன்.

Go to top
செல்வம் மேவிய நாளி லிச்செயல்
செய்வ தன்றியும் மெய்யினால்
அல்லல் நல்குர வான போதினும்
வல்லர் என்றறி விக்கவே
மல்லல் நீடிய செல்வம் மெல்லம
றைந்து நாடொறு மாறிவந்
தொல்லை யில்வறு மைப்ப தம்புக
உன்னி னார்தில்லை மன்னினார்.

[ 6]


தமக்குச் செல்வம் பெருகியிருந்த காலத்தில் இவ்வாறு அடியவர் வழிபாட்டைச் செய்துவந்ததன்றி, துன்பத்தை விளைவிக்கும் வறுமை உண்டாய விடத்தும், தமக்குரிய உண்மை யான பத்திமையால் இவ்வாறு செய்வரென்பதை யாவர்க்கும் அறிவிக்கும் பொருட்டு, வளத்தால் உயர்ந்த இவர் செல்வம் மெல்ல மெல்லக் குறைந்து நாள்தோறும் நிலைமை திரிய விரைவில் வறுமைத் தன்மையை அடையுமாறு, தில்லைமாநகரில் வீற்றிருந்தருளும் சிவ பெருமான் திருவுள்ளம் கொண்டருளினார்.

குறிப்புரை: ஒல்லையில் - விரைவில். மல்லல் - வளம். ஏகாரம் - அசைநிலை. இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

இன்ன வாறுவ ளஞ்சு ருங்கவும்
எம்பி ரான்இளை யான்குடி
மன்னன் மாறன்ம னஞ்சு ருங்குத
லின்றி யுள்ளன மாறியுந்
தன்னை மாறியி றுக்க உள்ளக
டன்கள் தக்கன கொண்டுபின்
முன்னை மாறில்தி ருப்ப ணிக்கண்மு
திர்ந்த கொள்கைய ராயினார்.

[ 7]


இவ்வாறு சிவபெருமான் திருவருளால் தமது செல்வம் நாளுக்கு நாள் குறையவும், எம் முதல்வராகிய இளையான் குடி என்னும் ஊரில் வாழும் அந்நாயனார், மனத்தில் பத்திமைக் குறைவின்றித் தம்மிடம் இருப்பனவற்றை விற்றும், கடன் பெற்று மீள அதனை அடைத்தற்குரியவாகச் சிலவற்றை ஒற்றி வைத்தும், கொடுக் கத்தக்க கடன்களைத் தக்கவாறு வாங்கிக் கொண்டும், பின்னர் முன்பு போலத் தளர்வின்றி அடியவர்க்கு அமுது படைக்கும் திருத்தொண் டால் மேம்பட்டொழுகும் கடப்பாடு உடையவரானார்.

குறிப்புரை: வளஞ்சுருங்க மனம் சுருங்குதல் பொதுவியல்பு. திருவருள் தோய்வால் அப்பொதுவியல்பு இன்றி வளஞ்சுருங்கவும், மனஞ் சுருங்காத சிறப்பியல்பை அடியவர் பெறுவாராயினர். உள்ளன மாறியும் - தமக்குள்ள பொருள்களில் சிலவற்றை விற்று அதற்குரிய பொருள்களைப் பெற்றும். தன்னை மாறி இறுக்கவுள்ள கடன்கள் - மீள அடைதற்கேற்ப ஒற்றி வைத்துக் கடனாகப் பெறத்தக்க பொருள்களைக் கடனாகப் பெற்றும். தம்மை என வேண்டுவது, எதுகை நோக்கித்தன்னை என நின்றது. எனவே விற்றற்குரியன வற்றை விற்றும், ஒற்றிவைத்தற்குரியனவற்றை ஒற்றி வைத்தும், பொருள் பெற்று, அதனால் முன்னைய திருத்தொண்டைத் தவறாது ஆற்றினர் என்பதாம். தன்னை மாறி - தன்னையே விற்று எனப் பொருள் காண்பாரும் உளர். அடியவர்க்கு உரியனவாக நிலனும், வீடும் இருத்தல் பின்னைய வரலாற்றால் தெரிதலானும், தன்னை விற்ற பின் தனக்குரிய அடிமைத் தொண்டைச் செய்தல் இயலாதாதலானும் இப்பொருள் கோடல் சாலாதாம். மாறுஇல் திருப்பணி - முன்செய்து வந்த திருத்தொண்டிற்கு மாறு இல்லாததாகிய திருப்பணி. எனவேமுன் செய்தபணியைத் தொடர்ந்து செய்து வந்தமை தெளிவாம்.

மற்ற வர்செய லின்ன தன்மைய
தாக மாலய னானஅக்
கொற்ற ஏனமும் அன்ன முந்தெரி
யாத கொள்கைய ராயினார்
பெற்ற மூர்வதும் இன்றி நீடிய
பேதை யாளுடன் இன்றியோர்
நற்ற வத்தவர் வேட மேகொடு
ஞால முய்ந்திட நண்ணினார்.

[ 8]


அவ் இளையான்குடிமாற நாயனாரின் செய்கை இவ்வாறு இருக்க, மாலான பன்றியும் அயனான அன்னமும் தாம் காணச் சென்ற அடியையும், முடியையும் அறிய இயலாதவராகிய சிவ பெருமான், ஆனேற்றை ஊர்தியாகக் கொள்ளாமலும், உமையம்மை யாரை ஒரு மருங்கில் கொள்ளாமலும், ஒரு நற்றவ வேடமுடைய அடியார் வேடத்தைக் கொண்டு இவ்வுலகம் உய்யும் பொருட்டு எழுந் தருளினார்.

குறிப்புரை: இறைவன் திருவடியைப் பன்றி வடிவுகொண்டு திருமால் அகழ்ந்தும் அறியாதவராகிப் பின், அப்பெருமானை வழுத்தியதன் பயனாக அறிந்தமையின் 'கொற்றவேனம்' என்றார். அயன் இறை வனைக்காணா திருந்தே கண்டேன் எனப் பொய் கூறிச் சாபம் பெற்ற மையின், வாளா, 'அன்னமும்' எனக்கூறினார். மற்று - அசைநிலை.

மாரிக் காலத் திரவினில் வைகியோர்
தாரிப் பின்றிப் பசிதலைக் கொள்வது
பாரித் தில்லம் அடைத்தபின் பண்புற
வேரித் தாரான் விருந்தெதிர் கொண்டனன்.

[ 9]


மழைக்காலத்தில் ஓர் இரவில், தனியே இருந்து அடக்கற்கரிய பசி மீதூர்வதை அடக்கிக் கொண்டு, வீட்டை அடைந்து தாழிட்டுக் கொண்ட பின்னும், மணம் மிகத் தேன் சிந்தும் குவளை மாலையையுடைய நாயனாரின் இல்லத்திற்குச் சிவபெருமான் விருந் தாக வர, நாயனார் அவ்வடியவரை எதிர்கொண்டு வரவேற்றார்.

குறிப்புரை: தரிப்பு, தாரிப்பு என முதல் நீண்டது. தரிப்பு - தாங்குதல். ஆதரித்தல் எனப் பொருள் கொண்டு, தம்மைத் தாங்கக் கூடியவர் யாவரும் இன்றி எனப்பொருள் காண்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). பாரித்து - மிகுந்து. தலைக்கொள்வது - வயிற்றகத் தடைவது. தலை - ஈண்டு இடப்பொருட்டு. வேரி - தேன். தார் - மாலை. ஈண்டுக்குவளை மாலையாம். வேளாளர்க்குக் குவளை மாலை உரியது. பண்புற எதிர் கொண்டனர் என இயைக்க. பண்பு - விருந்து ஏற்றற்குரிய பண்பு. இனிப்பண்புஉற என்பதற்குத்தாம் செய்த திருத்தொண்டின் பயனாகக் கிடைத்தற்குரிய வீடுபேறு அடையும் காலம் உற எனப் பொருள் கோடலும் ஒன்று.

ஈர மேனியை நீக்கி இடங்கொடுத்
தார வின்னமு தூட்டுதற் காசையால்
தார மாதரை நோக்கித் தபோதனர்
தீர வேபசித் தார்செய்வ தென்னென்று.

[ 10]


முதற்கண் விருந்தாக வந்த அவர்தம் திருமேனியில் உள்ள ஈரத்தைப் போக்கி, அவர் எழுந்தருளி இருத்தற் குரிய இடத்தைக் கொடுத்து, அதன்பின் அவர்தம் மனம் நிறைவு கொள்ளுமாறு உணவு ஊட்டுதற்கு விருப்புற்றாராக, தம் இல்லக் கிழத்தியாரை நோக்கி, இத்தவமுனிவர் மிகப் பசித்துள்ளார், நாம் என் செய்வது என்று கூறியவர், பின்னரும்.

குறிப்புரை: ஆர - (வந்த அடியவர்) மனநிறைவு கொள்ளுமாறு. இனி விருந்தூட்டுதற்குரிய தம் மனம் நிறைவு கொள்ளுமாறு எனினும் ஆம். தாரம் - மனைவி. தீர - மிக.

Go to top
நமக்கு முன்பிங் குணவிலை யாயினும்
இமக்கு லக்கொடி பாகர்க் கினியவர்
தமக்கு நாம்இன் னடிசில் தகவுற
அமைக்கு மாறெங்ங னேஅணங் கேயென.

[ 11]


மாதே! நம் வீட்டில் நமக்கு முன்னமேயே உணவின்றி வறுமையாக இருப்பினும், மலையரையன் மகளாகிய உமையம்மையை ஒரு கூற்றில் உடைய சிவபெருமானுக்குத் தொண்ட ராகிய இவ்வடியவருக்கு நாம் ஊட்டுதற்குரிய இனிய திருவமுதைத் தக்கவாறு அமைக்கும் வகை எவ்வாறு? என்று வினவ.

குறிப்புரை: இமம் - பனி: அதனால் மூடப் பெற்றிருப்பது பற்றி இமயமலை எனப்பெயர் பெறுவதாயிற்று.

மாது கூறுவள் மற்றொன்றும் காண்கிலேன்
ஏதி லாரும் இனித்தரு வாரில்லை
போதும் வைகிற்றுப் போமிடம் வேறிலை
தீது செய்வினை யேற்கென் செயலென்று.

[ 12]


இதற்கு அவ்வம்மையார் விடை கூறுவாராய், 'அடியவரை உண்பிப்பதற்கு வேறு வழியொன்றும் காண்கிலேன்; பிறர் எவரும் இனிக் கொடுப்பவர்களாயும் இல்லை, காலமும் கழிந்து நள்ளிரவாயிற்று, இவற்றையெல்லாம் விடுத்து இனிச்சென்று தேடுதற் குரிய இடமும் வேறில்லை, தீவினையேன் ஆகிய எனக்குமேற் கொண்டு செயத்தக்கதும் தெரிந்திலது' என்று கூறியவர், மேலும் எண்ணி.

குறிப்புரை: ஏதிலார் - அயலார். 'இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு' (குறள், 81) என்பர் திருவள்ளுவர். அவ்வறப்பயன் கிடைத்திலதே என்னும் கருத்தால் 'தீது செய்வினை யேற்கு' என்றார். 'விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை' (சிலப்ப. கொலைக். 73) எனக் கண்ணகியார் கூறு வதும் நினைவு கூர்தற்குரியது.

செல்லல் நீங்கப் பகல்வித்தி யசெந்நெல்
மல்லல் நீர்முளை வாரிக்கொ டுவந்தால்
வல்ல வாறமு தாக்கலும் ஆகுமற்
றல்ல தொன்றறி யேனென் றயர்வுற.

[ 13]


'நம் துன்பம் நீங்குமாறு இன்றைய பகற் பொழுதில் வயலில் விதைத்திருந்த செழிப்பாக நீரில் முளைத்தற்குரிய நெல்லைத் தாங்கள் வாரிக் கொண்டுவந்தால், அடியேன், அதற்கேற்ற வகையில் உணவாக்கித் தருதலுமாகும், இதுவன்றி வேறொரு வழியில்லை' என்று வருந்தினாராக.

குறிப்புரை: செல்லல் - துன்பம். 'செல்லல் இன்னல் இன்னா மையே' (தொல். உரி. 6) என்னும் தொல்காப்பியமும். மல்லல் - வளம்.

மற்றம் மாற்ற மனைவியார் கூறமுன்
பெற்ற செல்வம் எனப்பெரி துள்மகிழ்ந்
துற்ற காதலி னால்ஒருப் பட்டனர்
சுற்று நீர்வயல் செல்லத்தொ டங்குவார்.

[ 14]


பின்பு அம்மொழிகளை மனைவியார் கூறக் கேட்டதும், நாயனார் முன்தேடி வைத்திருந்த செல்வம் தம் கையகத்துப் பெற்றவர் போன்று மிகவும் மனமகிழ்ந்து, பொருந்திய ஆசையினால் நீர்சூழ்ந்திருக்கும் தமது வயலில், முளைத்தற்குரிய நெல்லை வாரிக் கொண்டு வரப் போதற்கு ஒருப்படுவாராகி.

குறிப்புரை: சுற்றுநீர் வயல்: நீர்சுற்று வயல் என மாறுக. நீர்சூழ்ந்த வயல் என்பது பொருள்.

பெருகு வானம் பிறங்கம ழைபொழிந்
தருகு நாப்பண் அறிவருங் கங்குல்தான்
கருகு மையிரு ளின்கணங் கட்டுவிட்
டுருகு கின்றது போன்ற துலகெலாம்.

[ 15]


விண் வெளியினின்றும் மிகப்பெருமழை பொழி தலால், பக்கங்களும், இடைவெளிகளும் அறிய இயலாதவாறு இருண்ட நள்ளிரவில், கருகிய, மை போன்ற, இருள் கூட்டம் தனது செறிவை விட்டு உருகுகின்றது போன்று அந்நேரத்தே உலகெலாம் தோன்றி நிற்க.

குறிப்புரை: அருகு நாப்பண் - அருகிலும் நடுவிடங்களிலும்; உம்மைத் தொகை. கருகும்மையிருளின் கணம் - கருமையை உடைய மை போன்ற இருட்கூட்டம். இவ்வாறு செறிந்திருந்த இருள், கட்டுவிட்டு உருகுகின்றது போன்று இராப்பொழுதில் பேரிருள் சூழநின்றது.

Go to top
எண்ணு மிவ்வுல கத்தவர் யாவருந்
துண்ணெ னும்படி தோன்றமுன் தோன்றிடில்
வண்ண நீடிய மைக்குழம் பாம்என்று
நண்ணல் செய்யா நடுவிருள் யாமத்து.

[ 16]


இதனை எண்ணுகின்ற இவ்வுலகினர் யாவரும் 'துண்' என நடுக்கமுற, அவ்வாறு அவ்விருள் பெருகி முன்னே தோன்றும் காலத்தில், மைக்குழம்பு இதுவாம் என வெளியில் எவரும் இயங்காதவாறு இருள் மிகுந்த நடுயாமத்தில்.

குறிப்புரை: மைவண்ணம் நீடிய குழம்பு எனக் கூட்டுக.

உள்ள மன்புகொண் டூக்கவோர் பேரிடாக்
கொள்ள முன்கவித் துக்குறி யின்வழிப்
புள்ளு றங்கும் வயல்புகப் போயினார்
வள்ள லார்இளை யான்குடி மாறனார்.

[ 17]


கொடையில் சிறந்தவராகிய இளையான் குடிமாற நாயனார், தம் மனத்தில் விளைந்த அன்பானது ஈர்த்துக் கொண்டு செலுத்த, ஒரு பெரிய கூடையைத் தம் தலையில் அடங்குமாறு முன்னே மூடிக்கொண்டு, தாம் முன்பு பழகிய மனக்குறிப்பின் வழியே பறவைகள் துயிலும் வயலினிடத்துச் சென்றார்.

குறிப்புரை: இவ்வெட்டுப் பாடல்களும் ஒருமுடிபின. பேர் இடா - பெரிய கூடை.

காலி னால்தட விச்சென்று கைகளால்
சாலி வெண்முளை நீர்வழிச் சார்ந்தன
கோலி வாரி யிடாநிறை யக்கொண்டு
மேலெ டுத்துச் சுமந்தொல்லை மீண்டனர்.

[ 18]


முளைத்தற்கென நெல் விட்டிருக்கும் இடத்தைக் காலால் தடவிப் பார்த்துப் பின்பு சென்று கைகளினால் சம்பா நெல்லின் வெள்ளிய முளைகள் நீர்வழிஒதுங்கி இருந்தவற்றைச் சேர்த்து, வாரிக் கூடை நிறையக் கொண்டு, தலைமீது எடுத்துச் சுமந்து கொண்டு விரைவாகத் தம் இல்லத்திற்கு மீண்டார்.

குறிப்புரை: கோலி வாரி - சேர்த்து வாரி.

வந்தபின் மனைவி யாரும்
வாய்தலின் நின்று வாங்கிச்
சிந்தையில் விரும்பி நீரில்
சேற்றினை யலம்பி யூற்றி
வெந்தழல் அடுப்பின் மூட்ட
விறகில்லை யென்ன மேலோர்
அந்தமின் மனையில் நீடும்
அலக்கினை யறுத்து வீழ்த்தார்.

[ 19]


இவ்வாறு நாயனார் முளைகளை வாரிக் கொண்டு வீட்டிற்கு வந்தபோது, அவர் மனைவியாரும், வீட்டு வாயிலில் நின்று அதனை வாங்கிக் கொண்டு, தம் மனத்தில் விருப்பம் உடையராய்த் தண்ணீரால் நெல்லில் கலந்த சேற்றைக் கழுவி, அந்நெல்லைப் பக்குவப்படுத்தி அரிசியாக்குதற்கு அடுப்பினிடத்து நெருப்பை மூட்டுதற்கு விறகு இல்லை என்று கூற, அவ் இளையான்குடிமாற நாயனாரும் பழங்கூரையாய் இருக்கும் தம் வீட்டின்கண் கட்டப்பெற்ற மேற்கழிகளை அறுத்து வீழ்த்தினார்.

குறிப்புரை: வாய்தல் - வீட்டுவாயில். தம் கணவனார் கடிய இரவில் வீட்டிலிருந்து வயல் வரை சென்று முளைகளை வாரிக் கொண்டு வந்தது அவர் அடியவரிடத்துக் கொண்டிருந்த அன்பின் பத்திமை யைக் காட்டுகின்றது. நெல்முளையை வாரி வர, இவர் வாயிலில் நின்று வாங்கியது இவர்தம் கணவரிடத்துக் கொண்ட அன்பு மேம்பாட்டையும் அடியவரிடத்துக் கொண்டிருக்கும் பக்தி மேம்பாட் டையும் ஒருங்கு காட்டுகின்றன.

முறித்தவை அடுப்பின் மாட்டி
முளைவித்துப் பதமுன் கொள்ள
வறுத்தபின் அரிசி யாக்கி
வாக்கிய உலையிற் பெய்து
வெறுப்பில்இன் அடிசி லாக்கி
மேம்படு கற்பின் மிக்கார்
கறிக்கினி யென்செய் கோமென்
றிறைஞ்சினார் கணவ னாரை.

[ 20]


அம்மனையிடத்துப் பெற்ற அலக்குகளை ஒடித்து அடுப்பில் சேர்த்து, முளை நெல் விதையை, முதற்கண் அரிசியாகும் பக்குவத்தை அடைதற்கு வறுத்துப் பின்பு அதனைக் குத்தி அரிசியாகச் செய்து, அவ்வரிசியை நீர் வார்த்த உலையிடத்து இட்டு, விரும்பி உண்ணக் கூடிய இனிய திருவமுதாக்கி, பெண்டிற்குரிய நாணினும் மேம்பட்ட கற்பிற் சிறந்த மனைவியார், 'உணவொடு கூட்டி உண்ணுதற்குரிய கறியமுதிற்கு இனியாம் என் செய்வோம்' என்று தம் கணவனாரிடம் விண்ணப்பித்தார்.

குறிப்புரை: பதம் - அரிசியாதற்குரிய பக்குவம். உணவாக்குதற் கென வறுத்துக் கொள்ளப்படும் நெல் வறுத்தலில் மிகுதலும் குறைதலும் இன்றிப் பக்குவமாக அமைதல் வேண்டும். அப்பக்குவம் வாய்த்தாலன்றி முழுமையாக அரிசி எடுத்தல் ஆகாது. அந்நிலையில் தவறாது அமைக்கப்பட்டது என்பார் 'பதமுன்கொள்ள வறுத்தபின்' என்றார். மகளிர்க்கு உயிரினும் சிறந்ததது நாண், அந்நாணினும் சிறந்தது கற்பாகும் (தொல். கள. 22) என்னும் தொல்காப்பியம், ஆத லின் 'மேம்படு கற்பின்' என்றார். இறைஞ்சினார் - தலைதாழ்த்தி விண் ணப்பித்துக் கொண்டார்.

Go to top
வழிவரும் இளைப்பி னோடும்
வருத்திய பசியி னாலே
அழிவுறும் ஐயன் என்னும்
அன்பினிற் பொலிந்து சென்று
குழிநிரம் பாத புன்செய்க்
குறும்பயிர் தடவிப் பாசப்
பழிமுதல் பறிப்பார் போலப்
பறித்தவை கறிக்கு நல்க.

[ 21]


வழி நடந்து வந்த இளைப்போடு, வருத்துகின்ற பசியினாலும் மனம் வருந்தி நிற்பார் எம் ஐயன் என்னும் அன்பினால் மீதூர்ந்தவராய், சென்று குழிகளினின்றும் உயர்ந்துமேற்செல்லாத புன்செய் நிலத்தில் முளைத்திருக்கும் கீரைவகைகளைத் தடவி, அக்கீரைகளில் சிலவற்றைத் தம் பாசத்தின் வேரைக் களைவார் போலப் பறித்துக் கறியமுதுக்குக் கொடுக்க.

குறிப்புரை: ஐயன் - தலைவன்; தம் இல்லத்திற்கு வந்தவராகிய அடியவர். குழி நிரம்பாத - தாம் முளைத்திருக்கும் குழியினின்றும் மேற்செல்லாத கீரை. அவ்வப்பொழுதும் அக்கீரைகளையே பறித்தும் தண்டுடன் ஈர்த்தும் பயன்படுத்தி வந்திருந்தமையால், 'குழி நிரம்பாத பயிர்' என்றார்.
'குப்பைக் கீரை கொய்கண் அகைத்த முற்றா இளந்தளிர் கொண்டு' (புறநா. 159) என்னும் சங்க இலக்கியமும். உலகியற் பொருள்களில் பாசம் சிறிதளவே இருப்பினும் அதன் வாயிலாக மயங்கிப் பிறவி வலைப் படுதற்கு ஏதுவாதலின், அதனை முற்றக்களைய வேண்டு மென்பார், 'பாசப்பழிமுதல் பறிப்பார் போல' என்றார். 'அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே' (மீனாட்சி பி. த. 62) என்பர் குமரகுருபரரும். சிவப் பேற்றிற்கு ஆளாகும் பெற்றிமை தோன்ற இவ்வுவமை கூறினார்.

மனைவியார் கொழுநர் தந்த
மனமகிழ் கறிக ளாய்ந்து
புனலிடைக் கழுவித் தக்க
புனிதபாத் திரத்துக் கைம்மை
வினையினால் வேறு வேறு
கறியமு தாக்கிப் பண்டை
நினைவினால் குறையை நேர்ந்து
திருவமு தமைத்து நின்று.

[ 22]


அம்மனைவியாரின் கணவராய நாயனார் கொடுத்த கீரைகளை, மனம் களிக்கத்தக்க வகையில் அவற்றின் வேர் களையும் நரம்புகளையும் களைந்து, தண்ணீரில் கழுவி, அவற்றைத் தகுதியும் தூய்மையும் உடைய கலத்தில் (பாத்திரத்தில்) தம் கைத் தொழிலின் திறத்தால் அவற்றை வெவ்வேறு கறியமுதாக்கி, தாம் முன் செல்வம் பெற்ற நன்னாளில் செய்யும் பக்குவங்களை நினைந்து வருந்தியவராகி, அவற்றைத் திருவமுதாக்கி.

குறிப்புரை: பல்வேறு கீரைகளைக் கொண்டு தக்க கறியமுதுகளைச் சமைத்திருப்பினும், திருப்பெற்றிருந்த பண்டை நாளை நோக்க அவை சிறிதாகியும், வேண்டுவன செய்து பக்குவப்படுத்தாமையுமாகக் கருதுகின்றார் ஆதலின், 'பண்டை நினைவினால் குறையை நேர்ந்து' என்றார்.

கணவனார் தம்மை நோக்கிக்
கறியமு தான காட்டி
இணையிலா தவரை ஈண்ட
அமுதுசெய் விப்போ மென்ன
உணர்வினால் உணர ஒண்ணா 
ஒருவரை உணர்த்த வேண்டி
அணையமுன் சென்று நின்றங்
கவர்துயில் அகற்ற லுற்றார்.

[ 23]


இவ்வாறு சமைத்து அமைத்த அம்மையார், தம் கணவரைப் பார்த்து, அக்கீரை அமுதுகளைக் காட்டி, ஒப்பில்லாத அவ்வடியவரை முறையாகத் திருவமுது செய்விப்போம் என்று கூற, உயிர்கள் தம் அறிவால் உணர ஒண்ணாத சிவபெருமானாகிய அவ் வடியவர் அமுது செய்ய வேண்டி, அவரை அணுகச் சென்று அவர் தம் துயிலை அகற்ற முற்படும் பொழுதில்.

குறிப்புரை: ***************

அழுந்திய இடருள் நீங்கி
அடியனேன் உய்ய என்பால்
எழுந்தருள் பெரியோய் ஈண்ட
அமுதுசெய் தருள்க வென்று
தொழும்பனா ருரைத்த போதில்
சோதியா யெழுந்து தோன்றச்
செழுந்திரு மனைவி யாரும்
தொண்டருந் திகைத்து நின்றார்.

[ 24]


'பிறவிப் பெருங்கடலில் அழுந்தி நிற்கும் அத் துன்பத்தினின்றும் நீங்கி, அடியனேன் உய்வதற்குத் திருவுளங் கொண்ட பெரியவரே! திருவமுது செய்தருள வேண்டும்' என்று அடி யவர், அப்பெரியவரிடத்தில் விண்ணப்பம் செய்ய, அடியவர் வேடங் கொண்ட சிவபெருமானும் ஒளிவடிவாய் விண்ணகத்தே தோன்ற, அவ்வரிய காட்சியைச் செம்மையான குணங்கொண்ட அடியவரின் மனைவியாரும், அவ்வடியவரும் கண்டு வணங்கித் திகைத்து நின்றார்கள்.


குறிப்புரை: இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

மாலயற் கரிய நாதன்
வடிவொரு சோதி யாகச்
சாலவே மயங்கு வார்க்குச்
சங்கரன் தான்ம கிழ்ந்தே
ஏலவார் குழலாள் தன்னோ
டிடபவா கனனாய்த் தோன்றிச்
சீலமார் பூசை செய்த
திருத்தொண்டர் தம்மை நோக்கி.

[ 25]


மாலும், அயனும், காண்டற்கியலாத அடியவராய் வந்த சிவபெருமான், ஒளிவடிவாய் நின்று, மனைவியாருடன் கண்டு திகைத்து நிற்கும் அவ்வடியவர்க்கு, பெருமகிழ்வுடன் மயிர்ச்சாந் தணிந்த நீண்ட திருமுடியையுடைய உமையம்மையாரோடு ஆனேற் றில் எழுந்தருளி, தமக்குச் சிறந்த முறையில் வழிபாடாற்றிய அவ் வடியவரை நோக்கி.

குறிப்புரை: நாதன் என்பதோடு சங்கரன் என்பதை இயைத்துப் பொருள் கொள்க. சாலவே - மிகுதியாகவே. ஏலம் - மயிர் சாந்து. ஏ, தான் என்பன அசைநிலைகள்.

Go to top
அன்பனே அன்பர் பூசை
அளித்தநீ அணங்கி னோடும்
என்பெரும் உலகை எய்தி
யிருநிதிக் கிழவன் தானே
முன்பெரு நிதியம் ஏந்தி
மொழிவழி ஏவல் கேட்ப
இன்பமார்ந் திருக்க என்றே
அருள்செய்தான் எவர்க்கும் மிக்கான்.

[ 26]


அடியவனே! அடியவர்களுக்கு வழுவாது வழிபாடு செய்து உணவளித்துவந்த நீ, உன்மனைவியோடும் என்னு டைய பெருமை பொருந்திய சிவலோகத்தையடைந்து, குபேரனே தனக்குரிய நிதிகளைக் கையில் ஏந்தி, உன் ஆணை வழிநின்று நீ பணித்த பணிகளைச் செய்து வர, இன்புற்று இருப்பாயாக என்று யாவர்க்கும் மேலோனாய சிவபெருமான் அருளிச் செய்தார்.

குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

இப்பரி சிவர்க்குத் தக்க
வகையினால் இன்பம் நல்கி
முப்புரஞ் செற்றா ரன்பர்
முன்பெழுந் தருளிப் போனார்
அப்பெரி யவர்தந் தூய
அடியிணை தலைமேற் கொண்டு
மெய்ப்பொருட் சேதி வேந்தன்
செயலினை விளம்ப லுற்றேன்.

[ 27]


இவ்வாறாய அருட்கொடையைத் தக்க வகையால் வழங்கியருளி, முப்புரம் எரித்தவராய சிவபெருமான் இவர் முன்னே எழுந்தருளிச் செல்ல, இவர்களும் சென்று அப் பேற்றைப் பெற்றனர். அப்பெருமானின் திருவருளுக்கு இலக்கான இளையான் குடிமாற நாயனாரின் தூய திருவடிகளைத் தலைக்கொண்டு வணங்கி, இனி, மெய்ப்பொருள் நாயனாரின் வரலாற்றைச் சொல்லத் தொடங்கு கின்றேன்.

குறிப்புரை: ******************


Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song